திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் வடக்குத் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு அதே பகுதியில் மாற்று இடம் (பஞ்சமி நிலம்) ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை தங்களுக்கு ஒதுக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஆக.31) திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வையம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானமணி மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) மனோகரன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.