திருச்சி: துவாக்குடி பகுதியில் தேசிய தொழில் நுட்ப கழகம் அமைந்துள்ளது. அதாவது தொழில் நுட்பத்தில் சிறந்தவர்களை உருவாக்குவதற்காக கடந்த 1964 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. தற்போது இந்த தொழில் நுட்பக் கழகத்தில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை பயின்று வருகின்றனர்.
இந்தியா முழுவதிலும் உள்ள 31 தேசிய தொழில் நுட்ப கழகங்களில் இதுவும் ஒன்றாகும். ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர். மேலும் இந்த தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.
இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பு திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் என்ஐடி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக் கழக பேராசிரியர் மற்றும் கணிணி சேவைக் குழுமத்தின் தலைவர் முனைவர் ந.சிவகுமரனுக்கு இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பு திருச்சிராப்பள்ளி கிளையின் உயரிய விருதான "பொறியாளர் PVK அச்சன் நினைவு IEI TLC வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது.
இது 2023 இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பின் திருச்சிராப்பள்ளி கிளை அவருடைய கல்வி, ஆராய்ச்சி, தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனம் கூட்டு முயற்சி, சமூகம் என பல்வேறு மாறுபட்ட துறைகளில் தன்னுடைய பங்களிப்பை அளித்ததற்காக இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பின் "ராஜாங்க தின" விழாவில் வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் பொறியாளர் ஜோதி வேலு, துணை சரக மேலாளர், பாரத் சஞ்சார் நிஹாம் நிறுவனம், தமிழ்நாடு 'தொலைத் தொடர்பில் பரிசோதனைகள் மற்றும் நீண்டகால பரிமாணம்' எனும் தொழில் நுட்பத் தலைப்பில் பேருரையாற்றினார்கள். இந்த விருது ஒருவருவடைய மதிப்பு மிக்க பங்களிப்பிற்காக இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் திருச்சிராப்பள்ளி கிளையால் வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.
அதைத் தொடர்ந்து, பொறியாளர் பாலசுப்ரமணியன், இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பு தலைவர், திருச்சிராப்பள்ளி கிளை முனைவர் கெவின் ஆர்க் குமார், கௌரவ செயலாளர் மற்றும் முனைவர் தர்மலிங்கம், தேசிய குழு உறுப்பினர், இந்திய பொறியாளர் சங்க கூட்டமைப்பு உள்ளிட்டோர் இணைந்து வழங்கிய விருதை சாதனையாளர் முனைவர் ந.சிவக்குமரன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.