மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரப்புரை மேற்கொண்டார். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த பரப்புரையில், முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
பரப்புரையில் பேசிய திருநாவுக்கரசர், ’தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த பலமான கூட்டணி மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதி மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த பலமான கூட்டணி அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றிபெறும்.
பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்காத நிலையில் ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு விரைவு ரயில் இயக்கவும், இதர மாநிலங்களுக்கு நேரடி ரயில் சேவை தொடங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இதுதொடர்பான துறை அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.