திருச்சி "மாற்றம் அமைப்பு" சார்பில் அதன் உறுப்பினர்கள் அனைவரும், நிறுவன செயலாளர் தாமஸ் தலைமையில் இன்று (ஜூலை26) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது, ஆட்சியர் சிவராசுவை சந்தித்து புகார் மனு ஒன்றையும் வழங்கினர்.
அந்த மனுவில், “கரோனா ஊரடங்கு காரணமாக நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு முடியும்வரை மக்களை கடன் தொகையை திரும்ப செலுத்த வங்கி உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்தக்கூடாது.
ஆனால் இந்த உத்தரவை மீறி பல தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தி தவணைத் தொகையை திரும்ப வசூல் செய்து வருகின்றன. அத்தகைய நிதி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையால் சிறுதொழில் புரிவோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நோயாளிகள் பாதிக்கப்படாமல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என கூறப்பட்டிருந்தது.