திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (47). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும்இவருக்கு இந்தப் பிரச்னை தீரவில்லை. இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.
அப்போது அவருக்கு சிறுநீரக குழாயில் 15 சென்டிமீட்டர் நீளம் அடைப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இரைப்பையிலிருந்து ஒரு குழாய் அமைத்து அந்தக் குழாயை சிறுநீர் பாதையில் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் ராஜேஷ் ராஜேந்திரன், கண்ணன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் சுமார் 7 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி ஒரு சிகிச்சை!
இந்த அறுவை சிகிச்சை என்பது இரைப்பை உறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சதை மூலம் 15 சென்டிமீட்டர் குழாயாக அமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பம்சம் ஆகும். இத்தகைய சிகிச்சை இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக அளவில் இது இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பதன் மூலம் இயற்கையான முறையில் அவர் சிறுநீரை எவ்வித சிரமமுமின்றி கழித்து வருகிறார் என்று மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 தலை, மூன்று கைகளுடன் பிறந்த வினோத குழந்தை.!