திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி கிஆபெ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் அர்ஷியா பேகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியில் முதன்முறையாக கேத்லேப் வசதி ஏற்படுத்தப்பட்டவுடன் கூலி தொழிலாளி ஒருவருக்கு பேஸ்மேக்கர் கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜமால் முகம்மது (55) என்ற கூலித்தொழிலாளி மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்த போது இதயத் துடிப்பு குறைவாக இருந்தது. அதாவது இதயத் துடிப்பின் அளவு 40 முதல் 45 வரை மட்டுமே இருந்தது. இந்த நிலை நீடித்தால் அவர் உயிரிழக்க வாய்ப்பு அதிகம். இதனால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் இலவசமாக இந்த பேஸ்மேக்கர் கருவி கடந்த 17ஆம் தேதி வெற்றிகரமாக ஜமாலுக்கு பொருத்தப்பட்டது. இதய நோய்ப்பிரிவு பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்கள் மணிவேல், அசோக் ஆகியோர் அடங்கிய குழு இந்த சிகிச்சையை மேற்கொண்டது. மயக்க மருந்து கொடுக்காமல் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.
தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த பேஸ்மேக்கர் கருவி மிகவும் நவீன மயமானதாகும். இந்த கருவி 10 முதல் 15 ஆண்டுகள் வரை நல்ல முறையில் செயல்படும். அதன் பின்னர் தேவைப்பட்டால் வேறு கருவி பொருத்தி கொள்ளலாம். சுமார் அரை மணி நேரம் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இவருக்கு பொருத்தப்பட்டிருப்பது நிரந்தர கருவியாகும். இதய துடிப்பு இயற்கையாக ஏற்படும் சமயங்களில் இந்தக் கருவி தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. அவரது இதயத்துடிப்பு தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருப்பார்" என்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணம்: உறவினர்கள் போராட்டம்