மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது பயணிகளில் ஒருவர் சமையல் எரிவாயு அடுப்பு கொண்டு வந்தார். அந்த அடுப்பின் குழாய்கள் சற்று வித்தியாசமாக இருந்ததால் அலுவலர்கள் திரும்பத் திரும்ப சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த அடுப்புக்கு செல்லும் குழாய்களில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் மறைக்கப்பட்டிருந்த 580 கிராம் தங்கத்தை கைப்பற்றி, விசாரித்ததில் கடத்தலில் ஈடுபட்டவர் திருவாடானை பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பதும், இந்தக் கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.18.50 லட்சம் ஆகும். நுாதன முறையில் தங்கம் கடத்திய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.