கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திருச்சியில் உள்ள பிரதான சந்தையான காந்தி மார்க்கெட் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டது. இங்கு செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் மாநகரின் பல்வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
எனினும் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், மாவட்டத்திற்குள் பேருந்து ஆகியவை செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், இன்று (செப்டம்பர் 2) காலை காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி மார்க்கெட் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். தகவலறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விரைந்து வந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதையும் மீறி வியாபாரிகள் போராட்டத்தைத் தொடர்ந்ததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்று திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாபாரிகளை தங்க வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 18 மாத ஊதியம் மறுப்பு; பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்