மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசிப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு, உறுதி செய்து கொடுக்கும் அவசரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
காவிரி ஆணையத்தை ஜலசக்தி அமைச்சகத்துடன் இணைப்பதை கைவிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திமுக விவசாய அணி, தமிழ்நாடு விவசாய சங்கம், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் மேற்கொள்கின்றன.
அந்த வகையில், விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்களின் சார்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு இன்று காலை தொடங்கி வைத்தார்.
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள நேரு அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏக்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், இந்திய கம்யூனிஸ்ட் இந்திரஜித், திராவிட மணி, மதிமுகவைச் சேர்ந்த வெல்லமண்டி சோமு, சேரன், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அயிலை சிவசூரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.