தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் மீது நடந்த கொலை முயற்சி தாக்குதலை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் கண்ணபிரான். இவர் நேற்று (பிப். 8) திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது வெடிகுண்டு வீச்சும் நடந்துள்ளது.
இதில் நல்வாய்ப்பாக கண்ணபிரான் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலை கண்டித்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் முத்துவேல் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மல்லை சுரேஷ், புறநகர் மாவட்ட செயலாளர் சுதாகரன், மாநில துணைத் தலைவர் செல்வம், மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் பரிமளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் கண்ணபிரானுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்மீது வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க... நிலப் பிரச்னையில் தொடங்கிய பகை: மைசூருவில் அரங்கேறிய இரட்டைக் கொலை