திருச்சி: தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக முன்னாள் டி.ஜி.பி.யும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் மீது தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தார்.
முன்னாள் டிஜிபியும், முன்னாள் மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும் தமிழ்நாடு அரசைப் பற்றியும் X பக்கத்தில் அவதூறு பரப்பும் நோக்கில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்ததாகவும், அதற்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருவதாகப் புகார் மனு அளித்ததை அடுத்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை நட்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் பல்வேறு அவதூறு செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் அவர் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் காவல்துறை பேச்சாலோ, எழுத்தாலோ, சைகையாலோ சாதி, சமய உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சித்தல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டது, பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முன்னாள் டிஜிபியும், முன்னாள் மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிப்பு!