திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன . இதில் திமுக கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களில் அதிமுக மூன்று இடங்களையும், சுயேச்சை இரண்டு இடங்களையும், ஒரு இடத்தில் அமமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், திருச்சி மாநகர மேயராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். திவ்யா, திருச்சி மாநகராட்சியின் துணை மேயராகப் பதவியேற்றார். முதல் முறையாக திருச்சி மாநகராட்சியில் திமுக மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றியது.
மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல்
65 வார்டுக்கு உள்பட்ட பகுதியை ஏற்கனவே நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐந்தாவதாக ஒரு புதிய கோட்டம் உருவாக்கப்பட்டு ஐந்து மண்டலமாக உருவாக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டலமும் 13 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கான கோட்டத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நேற்று (மார்ச் 30) தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் தேர்தலை நடத்தினார்.
முறையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வேறு எவரும் போட்டியிடாத நிலையில் 5 மண்டல தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். 1ஆவது மண்டல தலைவராக ஆண்டாள் ராம்குமார் , 2ஆவது மண்டல தலைவராக ஜெயநிர்மலாவும் 3ஆவது மண்டல தலைவராக மதிவாணனும், 4ஆவது மண்டல தலைவராக துர்காதேவியும் 5ஆவது மண்டல தலைவராக விஜயலட்சுமி கண்ணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று நியமனக்குழு உறுப்பினராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் திமுகவைச்சேர்ந்தவர் என்பதால் கூட்டணிக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் கூட்டணிக்கு மட்டும் நாங்கள் தேவை பதவியை அவர்களே பங்கிட்டு கொள்வார்களா என கேள்வி எழுப்புகிறார்கள்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் அமித் ஷா, ராகுல் காந்தி.. காரணம் என்ன?