தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். இதில் கிறிஸ்தவ வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடந்த 26 ஆண்டுகளாக கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை.
ஆகையால் சாதி அடிப்படையிலான எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக கடந்த 14 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கோரிக்கை அளிக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசும் கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
ஆனால் தற்போது வரை இது நிறைவேற்றவில்லை. கிறிஸ்தவ வன்னியர்கள் குறித்து ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னரும் சலுகைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தமிழ்நாடு அரசை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராட திட்டமிட்டுள்ளோம்.
இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும் சேராதது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடத்தும் போராட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் போட்டியாக நாங்கள் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. ஆகையால் உடனடியாக கிறிஸ்தவ வன்னியர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து உரிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க... வன்னியர் இட ஒதுக்கீடு இழுபறி முடிவுக்கு வருமா?