திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள காலி இடத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அவற்றை அறுவடை செய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பார்வையிட்ட சிறைக் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைத்து சிறைவாசிகளுக்குப் பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கரும்பு பயிரிடப்பட்டது. தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பொங்கல் பை திட்டத்தில் கரும்பு வழங்குவதற்காக, தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.
கூடுதலாக சிறைவாசிகளுக்கு பொங்கல் தினத்தன்று சிறப்பு உணவு வழங்கப்படும். சுமார் 40,000 கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. 80 விழுக்காடு இயற்கை முறையில்தான் கரும்பு விவசாயம் செய்துள்ளோம். ஒரு சில நேரங்களில் மட்டும் பூச்சி மருந்து பயன்படுத்தினோம். 100 விழுக்காடு இயற்கை முறையில் வேளாண்மை செய்வதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். சிறைவாசிகளுக்கு விவசாயப் பணி வழங்குவதோடு, சிறைச் சந்தை மூலம் பொது மக்களுக்கும் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கூடுதலாக வாழை, தென்னை, பாசிப்பயிறு, உளுந்து பயிறு, துவரை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. வெங்காயம் அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில் உள்ளது. நன்னடத்தையில் உள்ள சிறைவாசிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். அரசு தற்போது அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்த வெளிச் சிறைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.
அதில் பணியாற்றும் நன்னடத்தை உள்ள சிறைவாசிகளுக்கு ஒருநாள் பணிபுரிந்தால், அவர்களுக்கு அந்த நாள் தண்டனை குறைத்து வழங்கப்படும். கூடுதலாக அவர்கள் பணிபுரிவதற்கு உரிய ஊதியம் அரசால் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்யும் செங்காந்தள் விதை!