திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 143 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 24 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நடத்தப்படுவது வழக்கம்.
இதற்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர், இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் பெறுவது அவசியம். அந்த வகையில், 2019-2020 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 2021, டிச.9ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு 2020-2021, 2021-2022 மற்றும் 2022-2023ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.
இதனால், தன்னாட்சி மற்றும் இணைப்புக் கல்லூரிகளிலும் பட்டமளிப்பு விழா நடத்துவது கேள்விக்குறியாகி இருந்தது. இதன் காரணமாக, 3 மாதங்கள் மட்டுமே செல்லத்தக்க சான்றிதழை (Provisional certificate) வைத்துக்கொண்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் மாணவர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர்.
மேலும், இவ்வாறு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சகத்துடனான பனிப்போரால், ஆளுநர் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படாததே காரணம் எனக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜன.2-ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னர், பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில், “பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் முனைவர் பட்டம் பெற தகுதியானவர்கள், அதற்கான விண்ணப்பத்தை ஆக.16-ம் தேதிக்குள்ளும், ஏப்.2023-க்கான தரத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், பட்டச்சான்றிதழ் விண்ணப்பத்தை ஆக.16-ம் தேதிக்குள்ளும் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளருக்கு அனுப்ப வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த வகையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், பட்டயம், சான்றிதழ் படிப்பு மாணவர்கள் என 2.82 லட்சம் பேர் பட்டம் பெற விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில், ஜன.2-ம் தேதி நடைபெறும் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ள 30 மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்தை பிரதமர் வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெறும் விழாவில் பட்டங்களைப் பெறுவர் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பிரதமர் வருகையையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்தி, அழகுப்படுத்தும் பணி, பட்டமளிப்பு விழா அரங்கு, பூங்காக்கள், அனைத்து சுவர்களிலும் வர்ணம் பூசும் பணி, அலங்காரப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தரமற்ற நிலையில் உள்ள தார்சாலையைப் புதுப்பிக்கும் பணி கடந்த டிச.25-ம் தேதி தொடங்கியது. மேலும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் யாரும் டிச.31-ம் தேதி வரை விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பிரதமர் வருகையையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உள்ளிட்டோர் இன்று (டிச.27) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!