சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயிலில் அலகு குத்தி பிரார்த்தனை மேற்கொண்டார். சசிகலா பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் செந்தில், சசிகலா விரைவில் குணமடையவும், சிறையில் இருந்து விடுதலை பெற வேண்டியும் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.