திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலக வாயிலில் அரைநிர்வாண போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
அவர்கள் கழுத்தில் அழுகிய வெங்காய செடிகளை தொங்கவிட்டுக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நுழைவு வாயிலில் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கு வரை தரையில் உருண்டு வந்து மனு அளித்தனர். அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளரிடம் கூறுகையில்,
''ஒரு கிலோ வெங்காயம் இரண்டு ரூபாய்க்கு விற்ற போது கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை உருவானது. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட வெங்காயம் அழிந்துவிட்டது. வெங்காய விலை 100 ரூபாயை அடைந்த போது வெளிநாடுகளில் இருந்து 200 ரூபாய்க்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் வெங்காய விவசாயிகள் காப்பாற்றும் வகையில் ஒரு கிலோ வெங்காயத்தை அரசே விவசாயிகளிடம் இருந்து 50 ரூபாய்க்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ கொடுக்க வேண்டும். கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.
இதே போல நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் அறிவித்திருந்தார். ஆனால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காத காரணத்தால், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
ஆனால் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொள்ளாத காரணத்தால் கூட்ட அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ''நாகை மாவட்டத்தில் 3,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கவேண்டும், பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க: "இன்னொரு சுஜித் இறக்கமாட்டான்" - விவசாயிக்குள் ஒளிந்திருந்த விஞ்ஞானி