திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில், வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது நான்கு பயணிகள் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அவர்களின் செயல்பாடுகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து சந்தேகமடைந்த விமானநிலைய அலுவலர்கள், நான்கு பேரையும் முழுஉடல் பரிசோதனை செய்தனர்.
அப்போது, ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 1.9 கிலோ எடையுள்ள ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விமானநிலைய அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலிகான், காஜா என்று தெரியவந்தது.ஒரேநாளில் திருச்சி விமான நிலையத்தில் சுமார் இரண்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.