திருச்சி: மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று (டிச. 30) மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள்.
இன்று தொடங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக் கோரினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தும், அவர் திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசி அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் திருச்சி மாநகராட்சி மேயரை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மாமன்ற மாண்பையும் மீறி இழிவாக பேசியதை கண்டிக்கிறோம் என்றனர்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக இருக்கும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரை கண்டித்தும், வெளிநடப்பு செய்ததாக அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்!