திருச்சி: திருச்சியை சேர்ந்த கிளாரிநெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன் மற்றும் கிராமாலயா தாமோதரன் ஆகியோர் இந்தாண்டு பத்மஸ்ரீ விருதை பெறுகின்றனர்.
இந்நிலையில் கிளாரிநெட் கலைஞர் நடராஜன் நம்மிடம் பேசுகையில், “குடியரசு தின வாழ்த்துகள். கதர் வேஷ்டி, கதர் சட்டை என்னோட ஃபேவரெட் டிரெஸ், பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த காவிரிக்கரையில்தாங்க, அப்பா சின்னக்கிருஷ்ணநாயுடு கிளாரிநெட் வாசிப்பதை சிறுவயதில் தினமும் வைத்தகண் வாங்காம பார்த்துகிட்டு இருப்பேன்.
சிறுவயதிலேயே பாலப் பாடம்
ஒருநாள் திடீருனு என்னடா நீயும் வாசிக்கிறியா எனக்கேட்டதுதான் தாமதம் உற்சாகம் பீரிட்டுக்கொண்டு வந்து தலையை ஆட்டினேன். பாலப் பாடம் ஆரம்பமானது ஆலந்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஐயர்கிட்ட.. வாய்பாட்டும் இலுப்பூர் நடேசன்பிள்ளைகிட்ட நாகஸ்வரமும் கத்துக்க ஆரம்பிச்சேன்.
அப்புறம்தான் எங்கப்பா கிளாரிநெட் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சார், முதல்ல சின்ன லெவல்ல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன் ஆனாலும் என்னை பெயர் சொல்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான்.
1953ல கல்லிடைக்குறிச்சியில இந்தியா சிமெண்ட்ஸ் ஓனர் வீட்டு கல்யாணத்துல என்னை ஊர்வலத்துக்கு முன்னாடி போய் வாசிக்க சொல்ல, உடனே ராஜரத்தினம் பிள்ளை உட்கார்த்து வாசினாரு எனக்கு மிகப்பெரிய தயக்கம், உடனே நான் ராஜரத்தினம்பிள்ளை சொல்றேன் வாசினாரு அத்தோட அவர் வாசிக்கறத நிறுத்திட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நா வாசிக்கிறத உட்கார்ந்து கேட்டாரு, இதுக்கு பின்னாடிதான் நான் பிரபலமானேன்.
எம்.எஸ். சுப்புலெட்சுமி அம்மாவுடன் நிகழ்ச்சி
அதேபோல, 1956 டிசம்பர் கடைசியில மியூசிக் அகாடமி கச்சேரி எம்.எஸ். சுப்புலெட்சுமி அம்மாவும் ராஜரத்தினம் அய்யாவும் கலந்துக்கவேண்டிய நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சிக்கு சிலநாள்கள் முன்னாடி ராஜரத்தினம் ஐயா காலமாகிட்டாரு, சபாகாரங்களுக்கு ஒரே குழப்பம், அந்த எடத்துல யாரை வாசிக்க சொல்றதுனு.. எனக்கு தந்தி வந்தது வாசிச்சேன்.
அதுக்குப்பின்னாடிதான் அகில உலகமும் பரவ ஆரம்பிச்சது என் புகழ், இன்னு ஒண்ணு தெரியுமா எனக்கு 36 பவுன்ல கிளாரிநெட் பரிசா வந்தது அதை தேசிய பாதுகாப்பு நிதிக்கு பக்தவச்சலம் அய்யாகிட்ட நன்கொடையா கொடுத்திட்டேன்.
அதேபோல காமராஜர்கிட்ட வெள்ள நிவாரண நிதி கொடுத்திருக்கேன், கிட்டத்தட்ட 35 வருஷம் ஆச்சு வாசிக்கிறத நிறுத்தி என்றார்.
கடைசியாக ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன்.. இசையை வெறும் தொழிலா மட்டும் பார்க்காம ஒரு ஆத்மார்த்த உணர்வோடு வாசிக்கணும்... அப்பதான் இசையோட அவங்க பெயரும் வளரும்” என்று கூறினார்.
இத்தனை ஆண்டுகாலம் மனைவியோடும் கிளாரிநெட்டோடும் ரசனையா வாழ்ந்தாச்சு, இத்தனை ஆண்டுகள் கழித்து மத்திய அரசு இப்படி ஒரு விருது கொடுப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
கிளாரிநெட் ஏ.கே.சி.என் என்றால் அவருக்கு அத்தனை உற்சாகம் பொங்குகிறது. இவர், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக கிளாரிநெட் வாசிக்கிறார். இல்லை இல்லை கிளாரிநெட்டை காதலிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க:திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!