திருச்சி: இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (நவ.26) நடைபெறுகிறது. அதன்படி ஆயுதப்படை காவலர்கள், 1,091 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், 161 இரண்டாம் நிலை சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3,552 காலிப்பணியிடங்களுக்கு, 2,99,887 ஆண்களும், 66, 811 பெண்களும் மற்றும் 59 திருநங்கைகளும் என மொத்தம் 3,66,727 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும் 35 நகரங்களில் உள்ள 295 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டு ஏற்கனவே நவம்பர் 15-ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகரில் 16 தேர்வு மையங்களில் சுமார் 8,300 பேரும், புறநகர் பகுதிகளில் உள்ள ஏழு மையங்களில் சுமார் 9,000 பேரும் என மொத்தம் 23 தேர்வு மையங்களில் 17,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையத்திற்கு நுழைவதற்கு முன்பு முழு சோதனைக்கு பிறகு, அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சரிபார்த்த பின்னரே தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி, பல்வேறு பகுதிகளிலும் தேர்வு மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கர்நாடகா மாநிலத்தில் தோன்றிய காக்கி துணியின் கதை!