திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உப்புபாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு (39). இவர் காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணிசெய்துவந்தார். மேலும், இவர் பாஜக திருச்சி பாலக்கரை மண்டல செயலாளராகவும் இருந்துவந்தார். இந்நிலையில், இவர் கடந்த 27ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் காந்தி மார்க்கெட் நுழைவுவாயில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது ஒரு கும்பல் விஜயரகுவை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய விஜயரகுவை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விஜயரகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காந்தி மார்கெட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் இஸ்லாமியர்களுக்குத் தொடர்பிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். கட்சி முன்விரோதம் காரணமாகவே இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்தகைய பயங்கரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜயரகுவின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த மிட்டாய் பாபு என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜயரகு கொலை செய்யப்பட்டது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, ஹரி பிரசாத் ஆகிய இருவரும் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து சச்சின் என்கிற சஞ்சய், முகமது யாசர், சுடர் வேந்தன் ஆகிய மூன்று பேரை திருச்சி சஞ்சீவி நகரில் காவல் துறையினர் இன்று கைதுசெய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க :மகன் கண் முன்னே தந்தையின் உயிர் பிரிந்த சோகம்