மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளைத் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனைசெய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மன்னார்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது.
மேலும் கேட்ட கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் அவரது உடைமைகளை அலுவலர்கள் தீவிரமாகச் சோதனையிட்டனர்.
அப்போது உடைமையில் இருந்த கட்டிங் பிளேயர் வித்தியாசமாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் கட்டிங் பிளேயரை தீவிரமாகச் சோதனையிட்டனர்.
அப்போது அதில் 10.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 217 கிராம் எடை கொண்ட தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதனைப் பறிமுதல்செய்து சுப்பிரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.