திருச்சி: சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களைத் திட்டி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர், சூர்யா தேவி. குறிப்பாக, சினிமா நடிகை வனிதாவுக்கும் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் நாஞ்சில் விஜயனுக்கு ஆதரவாக டிக் டாக் வெளியிட்டு, ரவுடி பேபி சூர்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர். மேலும் அவ்வப்போது இது போன்ற செயல்களில் ஈடுபட்டு தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் தனக்குத்தானே, ஒரு ரசிகையாக இருப்பவர்.
சமீபத்தில் நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தின்போது அவரை விமர்சித்தது, டிக்டாக் பிரபலம் ரவுடி சூர்யா பேபியுடன் குழாய் அடி சண்டை என, சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களுக்குப் பேர்போன சூர்யா தேவிக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமூக வலைதளங்களில் கெத்து காட்டிய சூர்யாதேவி, காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம், தற்போது டிரெண்டிங் ஆகி உள்ளது.
சூர்யா தேவி, கடந்த 21ம் தேதி மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, அவரது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகப் புகார் அளித்திருந்தார். அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தான் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வந்த சூர்யாதேவி காவல்நிலையம் முன்பு, பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு அவர் மேல் தண்ணீர் ஊற்றி காப்பாற்றியுள்ளனர். சூர்யாதேவி கொடுத்தப் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் புகாருக்கு ரசீது கொடுத்து உள்ளனர். புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட, அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் காவல்நிலையம் வந்த சூர்யாதேவி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
மேலும், மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து தன் மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக் கொல்வதாக காவலர்களை மிரட்டியுள்ளார். அதனையடுத்து பணியில் இருந்த தலைமைக் காவலர் லாரன்ஸ் அளித்த புகாரின்பேரில், வாதியையும் மற்ற காவலர்களையும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார், சூர்யாதேவியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி அவரை 6 மாதகாலங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, சூர்யா தேவி, திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவும் ஒரு விளம்பரத்திற்காகத் தான் செய்திருப்பார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "நாளை நமதே" - பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பைடன்!