திருச்சி: பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலம் என்றழைக்கப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலமாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மைத்தலங்களான இத்தலத்தின் பெயரில் சிவபெருமான் நாமம் உள்ள போதிலும், இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கே அதிகப்படியான மகிமையுண்டு.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். திருவானைக்காவல், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-ஆவது சிவத்தலமாகும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் சுவாமி அம்பாளுக்கு நித்தியப்படி பூஜைகளுடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்திரசேகரர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் புறப்பாடுகள் நடந்தன, அஷ்டக்கொடியேற்றம் 28ஆம் தேதி நடந்தது. இதனையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதி (இன்று இரவு) சுவாமி, அம்பாள் தெருவடச்சானில் வீதியுலா வரவுள்ளனர். அதனை தொடர்ந்து, தேரோட்டம் நாளை (ஏப்ரல் 2 ஆம் தேதி) காலை நடக்கவுள்ளது.
காலை 3 மணிக்கு உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருள்கின்றனர். அதன் பின், காலை 6.30 மணிக்கு தேர்வடம் பிடிக்கப்படவுள்ளது. திருவானைக்காவலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியே 2 பெரிய தேர்கள் உண்டு. அவை இரண்டும் ஒரேநாளில் அடுத்தடுத்து வடம்பிடிக்கப்பட்டு தெற்கு ரதவீதிகளில் வலம் வரும்.
இதனிடையே, தேரோட்டதை முதன்முதலாக திருச்சி மாநகர மேயராக பொறுப்பேற்றிருக்கும் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். அம்மன் தேருக்கு 'ஹைட்ராலிக் பிரேக்' BHEL சார்பாக பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்வம் பெருகும் ஜெம்புகேஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு