மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று (மே.21) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தது நல்ல விஷயம். அவர் மூலம் பல நல்ல வளர்ச்சிப் பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக அவர் இருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல்கட்டமாக கரோனாவை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறார். குடும்பத்திற்கு 4,000 ரூபாய் அறிவித்து, முதல் கட்டமாக 2,000 ரூபாய் வழங்கியுள்ளார். கரோனாவால் தினசரி பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
ஜூன் இரண்டாவது வாரம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வரை பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும். அரசு, தனியார் மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் உள்ளது. வெண்டிலேட்டர் வசதி இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் 40 இடங்களில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, பெரம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் பிளான்ட் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்க வேண்டும் என்றும், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிளான்டை புதுப்பித்தால், மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கலாம். 15 ஆண்டுகளாக முடங்கி இருப்பதால் உடனே ஆரம்பிக்க 56 கோடி ரூபாய் செலவாகும். ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மூன்று மாதங்களாகும். இந்தத் தகவலும் ஸ்டாலின் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவானாலும் பரவாயில்லை எதிர்காலத்தில் கரோனா தொற்று 3ஆவது அலை வந்தாலும் இது உதவியாக இருக்கும். ஆகையால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் திருச்சியில் மூன்று ஆக்ஸிஜன் பிளான்ட்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பூஞ்சை என்ற நோய் வேகமாக தமிழ்நாட்டில் பரவி வருகிறது. இதற்கான ஊசி தமிழ்நாட்டில் இல்லை. கரோனா நோய் முற்றிய பிறகு இந்த நோய் வருகிறது. இந்த நோய் தாக்கும் உறுப்பு அழுகிவிடும் நிலை உள்ளது. இதற்காக ஐந்தாயிரம் ஊசிகளை சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு, மத்திய சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் போதிய உபகரணங்கள், மருந்துகள் உதவிகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். சட்டப்பேரவைக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்