திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒன்பது மாநகராட்சிகளில் ஒரு மேயர், 9 துணை மேயர் பதவிகளை விசிகவிற்கு வழங்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்துள்ளோம். கோரிக்கையை ஸ்டாலின் பரிசீலனை செய்வார் என நம்புகிறோம்.
கடலூரில் மேயர், திருச்சியில் துணை மேயர் பதவியைக் கேட்டிருக்கிறோம். அதிமுக தோல்வியை இப்படித்தான் ஓபிஎஸ் நியாயப்படுத்த முடியும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வாக்கு விழுக்காட்டை திமுக பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடக் கூடாது.
அந்த வாக்கு விழுக்காடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக் கூடாது. வேண்டுமென்றால் பூஜ்ஜியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிமுகவைச் சிறுமைப்படுத்தும் பாஜக
பாஜக சட்டப்பேரவைத் தேர்தலைவிட 0.5 விழுக்காடுதான் கூடுதல் வாக்கு பெற்றிருக்கிறது. சில இடங்களில் அதிமுகவைவிட பாஜக அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது எனக் கூறுவது அதிமுகவைச் சிறுமைப்படுத்தும் செயல்.
மீண்டும் பாஜகவை தோளில் சுமந்தால் அதிமுக அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும் என்பதால்தான் அதிமுக பாஜகவை கழற்றிவிட்டது. அதிமுகவே பாஜகவை கழற்றிவிடும் அளவிற்கு மக்களிடம் அவநம்பிக்கையைப் பெற்றுள்ளது பாஜக.
தஞ்சாவூர் மாணவிக்கு மைக்கேல்பட்டியில் இன்று மாலை அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த எட்டு மாதத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பாராட்டுதலை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். இந்த நன்மதிப்பு தேர்தல் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது. 55 விழுக்காடு என்கிற அளவில் விசிக வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 27 இடங்களில் 18 இடங்களில் விசிக வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - ஓபிஎஸ் கேள்வி