திருச்சி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மேலும் ஒரு சில பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்தும் தார் சாலைகள் அமைக்கப்படாமல், பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மண் புழுதியில் சாலைகளை கடந்து செல்லக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மெயின்கார்டு கேட் பகுதியில் பாதாளச்சாக்கடைப் பணிகளுக்காக குழிகளைத் தோண்டியபின் சரி வர மூடாமல் சென்றுள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. அப்போது அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் காமராஜ் பள்ளம் நிறைந்த பகுதிகளில், மண்ணை அள்ளிப்போட்டு சாலையை சரி செய்யும் பணியில் வெகுநேரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த சாலையோரவாசிகள் உடனடியாக அங்கு சென்று போக்குவரத்து காவலரிடமிருந்த மண்வெட்டியை வாங்கி அந்தப்பணியை அவர்கள் செய்ய முன்வந்தனர். போக்குவரத்து காவலர் காமராஜின் செயல் அப்பகுதி வழியாக சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
மக்கள் பெரிதும் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலைகளில் மாநகராட்சிப் பணிகளை விரைந்து முடித்து தார்ச் சாலைகளை அமைத்து, மக்கள் சிரமமின்றி செல்ல திருச்சி மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே அப்பகுதி வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கொள்ளைபோகும் கொள்ளிடம் ஆற்று மணல்..