திருச்சி: கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேற்று (மார்ச்.11) மதியம் 01:15 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் நிலைய நடைமேடை எண் 3-ல் காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளுக்குள் ஏறிக் கொண்டனர்.
குறிப்பாக, S1 முதல் S10 வரை உள்ள பெட்டிகளில் முன்பதிவு செய்து இருந்த பயணிகள் இருந்தனர். ஆனால், முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்ற வடமாநில தொழிலாளர்கள் முன்பதிவு பெட்டிகளில் கட்டுக்கடங்காமல் ஏறியதால் மற்ற பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, மதியம் 01:30 மணி அளவில் ரயில் புறப்பட்ட போது முன்பதிவு பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர். உடனடியாக டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீசார் அபாய சங்கிலியை யார் இழுத்தது என்ற விசாரணையை நடத்தினர்.
முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாமல் ஏறிய வட மாநிலத்தவர்களை இறக்கி விடுமாறு மற்ற பயணிகள் தெரிவித்தனர். இரண்டு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்களை இறக்கி விட்ட போலீசார் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை நகர்த்த அறிவுறுத்தினர்.
பின்னர், ரயில் கிளம்பியதும் மறுபடியும் ரயில் அபாய சங்கலியை பிடித்து பயணிகள் இழுத்தனர். இதே போன்று, நான்கு முறை அபாய சங்கிலியை இழுக்கப்பட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயண சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யாமல் ஏறிய வட மாநிலத்தவர்களை கீழே இறக்கிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, ரயில் பெட்டியில் ஏறிய பயணிகளிடம் டிக்கெட் வைத்துள்ளார்களா? என்று டிக்கெட் பரிசோதர்கள் சோதனை செய்தனர். இதில் பெரும்பாலான வடமாநில பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக, அவர்களை ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, 02:35 மணி அளவில் ரயில் புறப்பட்டது. அப்போது மூன்றாவது நடைமேடையில் காத்திருந்த வட மாநிலத்தவர்கள் ரயில் புறப்பட்டதும் ஓடிப்போய் ரயிலில் ஏறினார்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதர்கள் பல முறை அறிவுறுத்தியும் அவர்களை மதிக்காமல் வட மாநில பயணிகள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவ்வாறு மீண்டும் புறப்பட்டு சென்றனர். வட மாநில தொழிலாளர்களால் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், அனைத்து ரயில் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். அத்துடன், இந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முதலாளியின் வீட்டு விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்து அசத்திய வட மாநிலத்தவர்கள்