திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் நடுகல் கூறும் வரலாறு நூலை வெளியிட்டார். கல்வெட்டு ஆய்வாளர் கரூர் ராஜூ முதல் பிரதியினை பெற்றுக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘நடுகற்கள் வரலாறு, கலாசாரம், அரசர்களின் ஆட்சி, மொழி, போர் மற்றும் போர் முறைகள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.
நாடு, இனம் காத்து மாண்ட போர் வீரர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. போர் வீரர்களின் வீரம், தியாகத்தைப் போற்றும்படி அவர்களது நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன் கல், புலிகுத்திக்கல், நவகண்டம், ஆயுத கல் எனப் பலவகை உள்ளது.
பண்டைய காலத்தில் அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றி பெற்று காடுகள் வழியாக வரும் போது புலி, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளுடன் சண்டையிடும் போது உயிரிழக்கும் வீரனுக்கு அந்த இடத்திலேயே நடுகல் நட்டு வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதை புலிக்குத்திக்கல் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல் பன்றி குத்திக்கல், குதிரை குத்திக்கல், யானைப் போர் நடுகல் எனப் பல வகைகள் உள்ளது. அவற்றுள் ஒன்று எருது பொருதார் கல் என்பதாகும். இதில் காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
சதிக்கல் எனப்படுவது கணவன் இறந்தவுடன் அந்த சிதையிலேயே உடன்கட்டை ஏறும் பெண்ணிற்கு வைப்பதாகும். நவகண்டம் என்பது தனது நாட்டு அரசன் போரில் வெற்றி பெற்றால் தன் உயிரையே பலியிடுவதாக பொதுமக்கள் வேண்டிக் கொள்வார்கள். அவ்வாறு அரசன் வெற்றி பெற்றவுடன் வேண்டுதலை நிறைவேற்ற உடம்பில் கை, கால் என 9 இடங்களில் வெட்டிக்கொண்டு, முடிவில் கழுத்தில் கத்தியால் வெட்டி தங்களது உயிரை பலி கொடுப்பார்கள். 'நடுகல்' என்பது பெருங்கற் கல்லறைகள் என்ற சடங்கு ரீதியான நினைவுச் சின்னங்களில் அடங்கும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் குணசேகரன், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ், முகமது சுபேர், தாமோதரன், கமலக்கண்ணன், சந்திரசேகரன், சாமிநாதன், உதயச்சந்திரன், சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால் கடோட் மிரட்டும் 'வொண்டர் வுமன் 1984' - டிரெய்லர் வெளியீடு!