திருச்சி: தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.
முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான சிலம்பச்சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.
மேலும், சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படுகிறது. பேச்சு வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க கலை காலப்போக்கில் மறைந்துகொண்டே வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த கலை கற்பிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனல் பறக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்; திருச்சியில் திரளும் திமுகவினர்
இந்நிலையில் உலகப்பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலைச் சங்கம் சார்பாக மலேசியாவில் உலக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா, இந்தியா, இலங்கை, அயர்லாந்து, நேபாளம், கத்தார், சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கி நேற்று ஜூலை 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்க திருச்சியில் இருந்து மாவட்டம், மாநில அளவில் ஏற்கனவே நடந்த பல்வேறு சிலம்பப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அகிலேஸ்வரன், முகிலேஸ்வரன், திஷிகா, அருணேஷ், ஆதித்யா, கோகுல், பிரியதர்ஷன் உள்ளிட்ட 13 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் நடைபெற்ற அனைத்து சிலம்ப போட்டிகளிலும் பங்கேற்று தமிழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதில் 15 தங்கப்பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள் , 12 வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சிலம்ப வீரர், வீராங்கனைகளை கிரீஸ் கோகுல் சிலம்பாட்ட பயிற்சிக்கழகம் மற்றும் சிலம்பக் கலை பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணா, விஜயன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மாலை அணிவித்து சால்வை போர்த்தி இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.
குறிப்பாக இந்த சிலம்பாட்ட வீராங்கனைகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பம் கலையை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சந்திரமுகி 2' படத்திற்கு 2 மாதங்கள் தூங்காமல் உழைத்த கீரவாணி - வெளியான பட அப்டேட்!