எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பொருளாதார முன்னேற்றத்திற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால்தான், 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் வீரியம் அடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதனால் பிரதமரும், நிதியமைச்சரும் இணைந்து இந்த தேக்க நிலையை மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி நிதி பெறப்பட்டதே, கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகதான் என்ற ஒரு சந்தேகம் உள்ளது. காஷ்மீரில், 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு கருத்து சுதந்திரம் பறித்தது, ஜனநாயக விரோத போக்காகும். இதேபோல், அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் 19 லட்சம் பேர் புறக்கணிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்துவது, ஜனநாயகப் படுகொலையாகும். அதனால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.