திருச்சி, மதுரை ஆகிய ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடனான கலந்தாலோசனை கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.க்களின் கருத்துகள் பின் வருமாறு,
திமுக எம்.பி திருச்சி சிவா:
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தினமும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி-சேலம் பயணிகள் ரயில், திருச்சி - சென்னை வாராந்திர சிறப்பு ரயில், திருச்சி-டெல்லி, திருச்சி-மும்பை ஆகிய இடங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள உயர்நடை மேடைக்கு லிஃப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆர்ஓ குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவேன். இதுபோன்ற கூட்டங்களில் எடுத்து வைக்கப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை. இது சம்பிரதாய அளவுக்குதான் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்று மாதத்திற்குள் சம்மந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
கரூர் எம்.பி ஜோதிமணி:
மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விராலிமலையில் ரயில் நிலையம் வேண்டும் உள்பட 54 கோரிக்கைகள் வைத்துள்ளேன். ரயில்வேயில் தமிழ் புறக்கணிக்கப்படுவது குறித்து அனைத்து எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளோம். தமிழர்களுக்கான பணிகளில் வட இந்தியர்களை புகுத்துவது தொடர்கிறது. இந்தியில் மட்டுமே சுற்றறிக்கை அனுப்புவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடராது என்று அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்:
ரயில்வேயில் வர்த்தக பிரிவில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் இந்தியில் மட்டுமே பேசுவதால் பயணிகள் தகவல்களை கேட்க முடியாமல் அவதியுறும் சூழல் நிலவுகிறது. முதலாவதாக வட இந்தியர்களுக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க கற்றுத்தர வேண்டும். இரண்டாவதாக வர்த்தக பிரிவில் இருந்து இவர்களை மாற்ற வேண்டும். இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் வட இந்தியர்கள் பணியாற்றுகின்றர். திருச்சி, மதுரை கோட்டத்தில் இவ்வாறு எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்று ஆதாரத்தை கொடுத்துள்ளேன். அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி:
மதுரை-சென்னை தேஜஸ் ரயில் பெயரை தமிழ்ச் சங்கம் என பெயர் மாற்றம் செய்யக்கோரி அனைத்து எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளோம். மழை காலங்களில மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை ரயில் இயக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் மண்டபம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.