திருச்சி: ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை, தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் நடந்த ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்க பொதுக்குழுவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (நவ.25) திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் உம்ரா ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா பேசியதாவது, “ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை, தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும். உம்ரா புனித பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழில் உரிமைச் சான்றிதழ் வழங்கி, தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.
மேலும், போலி டிராவல்ஸ் நிறுவனங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாற்றம் அடையக் கூடாது. எனவே, போலி நிறுவனங்களை கண்டறிந்து, முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் பல பெரு நகரங்களில் இருந்து ஜித்தாவிற்கு விமான சேவை உள்ளது போன்று, சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவையைத் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து, ஹஜ் உம்ரா புனித பயணத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டணங்களை விட, அதிக கட்டணங்களை வசூலித்தால் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட சேவையை முறையாக வழங்காமல் இருக்கும் நிறுவனங்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜுபைர், பொருளாளர் மக்கா கலீல், துணைத் தலைவர்கள் முகமது யூசுப், முகமது பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை... அதிமுகவினர் வெற்றி!