திருச்சி: முசிறி அடுத்த பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த நீலமேகம், 12 வருடமாக காஷ்மீரில், துணை ராணுவப்படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, கடந்த 27ஆம் தேதி இரவு, தனது குழந்தையுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த தாலியை, வீடு புகுந்து அடையாளம் தெரியாத நபர் பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ராணுவவீரரின் மனைவி கலைவாணி, முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் காஷ்மீரில் பணியில் இருக்கும் ராணுவ வீரர் நீலமேகம், வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோருக்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியிருந்தார். அதில், தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார்.
ராணுவ வீரரின் பதிவை பார்த்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் ராணுவ வீரர் நீலமேகம் ஆகியோரிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் எனவும், இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ராணுவ வீரரின் பதிவை பார்த்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து காவல்துறைத் தலைவர் பேசிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்