திருச்சி: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு முழுக் கரும்புடன் கூடிய 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கிவருகிறது. இந்நிலையில் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள் கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் கரும்பு விவசாயம் பரவலாக நடந்துவருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி விளைந்த கரும்புகளை வெட்டி விற்பனைக்காகக் கொண்டுசெல்லும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. இது குறித்து விவசாயி அரவிந்தன் கூறுகையில், "தமிழ்நாடு அரசு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் வரை கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அறிவித்துள்ளது. ஆனால் எங்களிடம் அதிகபட்சமாக 15 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். வெளிச் சந்தையில் 22 ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை" என வேதனையோடு தெரிவித்தார். இனிப்பான கரும்பு, விவசாயிகள் வாழ்க்கையில் இனிக்காமல் உள்ளது எனவும் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகதாது அணை கட்டக்கோரி காங்கிரஸ் பாதயாத்திரை.. காய்ச்சலால் பாதியில் திரும்பிய முன்னாள் முதலமைச்சர்!