திருச்சி: தமிழ்நாட்டில் சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளுக்காகவும், பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் செங்கரும்பு பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வழிபடுவதற்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு அதிமுக ஆட்சிக்காலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, செங்கரும்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கியது. அதனால், செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் ஆண்டுதோறும் பலன் அடைந்ததாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின், கடந்த ஆண்டு மட்டும் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்ததால், இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மட்டுமே வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசை நம்பி செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பெரும்கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியதாவது, “திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாலக்குறிச்சி, கிளிக்கூடு, திருவளர்சோலை போன்ற கிராமங்களில் 100 முதல் 110 ஏக்கர் வரை செங்கரும்பு செய்யப்படும்.
திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளும் பொங்கல் சீசனில் செங்கரும்பு கொள்முதல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, செங்கரும்பு கொள்முதல் செய்தனர்.
திமுக அரசும் கடந்த ஆண்டு செங்கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கியது. அதை நம்பி இந்த ஆண்டும் செங்கரும்பு சாகுபடி செய்தோம். ஆனால், திடீரென கரும்பு வழங்குவதை நிறுத்திவிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பணமும், அரிசியும் கொடுப்பதாக அறிவித்திருப்பது, செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இடு பொருட்கள், ஆட்கள் கூலி என பத்து மாதப் பயிரான செங்கரும்பு சாகுபடி செய்ய, மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம்.
அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ததன் மூலம் வாழ்வாதாரம் மேம்பட்டது. அரசு கொள்முதல் செய்யாத நிலையில் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்டு வாங்குவர். ஒரு ஆண்டு மட்டும் கரும்பு கொள்முதல் செய்துவிட்டு இந்த ஆண்டு, திடீரென செங்கரும்பு கொள்முதலை நிறுத்திவிட்டதால், அரசை நம்பி கொள்முதல் செய்த விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், முதலீடு கூட எடுக்க முடியாத நிலையில் செங்கரும்பு சாகுபடி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, முதலமைச்சர், பரிசு அறிவிப்பை மறுபரிசீலனை செய்து செங்கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தஞ்சை கலெக்டர் ஆபிஸ் முன் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு; எம்எல்ஏ கைது