திருச்சி: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில், உள்ள நகர்ப்புறங்களில் தேர்தல் வேலைகளைச் செய்ய அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
வழக்கமாக, ஆட்சியில் இருக்கும் கட்சியினருக்கும், எதிர்க் கட்சியினருக்கும் தான் இது போன்ற நேரங்களில் போட்டி நிலவும். அவ்வப்போது, இந்த இரண்டு கட்சிகளிலுமே சில உட்கட்சிப் போட்டிகளும் எழும்.
அதுதான் தற்போது திருச்சி மாநகரில் நடைபெறுகிறது. ஆட்சியில் இருக்கும் திமுகவின் முக்கியமான இரண்டு அமைச்சர்களைக் கொண்டுள்ள மாநகரம் திருச்சி ஆகும்.
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சராகவும், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் கே.என். நேரு இருந்து வருகிறார்.
இன்னொரு புறம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் கட்சியில் குறிப்பாக இளைஞரணியில் மிகக் குறிப்பிடத்தக்க முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசியலில் அறிமுகம் செய்யலாமா!
இந்த நிலையில், திருச்சி மாநகரில் கே.என். நேரு அவர், தன் மகன் அருணை முதலில் களமிறக்க எண்ணினார்.
இதற்கிடையே அவருக்கு நெருக்கமாக இருந்த குடமுருட்டி சேகர் தரப்பினர், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மேயர் பதவி
இதற்கிடையே தனக்கு விசுவாசியாக இருக்கும் முன்னாள் துணை மேயர் அன்பழகனை மேயராக்கிப் பார்க்க கே.என். நேரு தரப்பும்; மலைக்கோட்டை பகுதிச்செயலாளர் மதிவாணனை மேயராக்க வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பும் திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது இப்படியிருக்க, திமுகவில் நல்ல பெயருடன் விளங்கும் பரணிக்குமார் குடும்பத்தினரை மேயராக்கிப் பார்க்க திமுகவின் தலைமை விரும்பும் நிலையில், அக்குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் மேயர் பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க, திமுகவின் தலைமை மறைமுகமாக சிலரை பணிக்கு நியமித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க:வேளாண் பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு