உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் "இயற்கை பெக்ஸ் 2019" என்ற பெயரில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி தொடங்கி வைத்தார். மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
தபால்தலை கண்காட்சியில் நீர் வளம், நில வளம், இயற்கை வளம், இயற்கை பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பூக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை குறிப்பிடும் அஞ்சல் தலைகள் இடம்பெற்றுள்ளன.
மூத்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் தங்களது சேகரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த கண்காட்சி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறும். இறுதி நாளன்று சிறப்பான 3 அஞ்சல் தலை சேகரிப்புகள் தேர்ந்தெடுக்கப்படு பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் கலந்துகொண்ட அஞ்சல்தலை சேகரிப்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட இருக்கின்றன. இக்கண்காட்சியை குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.