திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல் உயிரிழந்த குழந்தை சுஜித் கல்லறைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின், சுஜித்தின் பெற்றோரை சந்தித்து திமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சுஜித்தை இழந்த தாய், தந்தையருக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கே வந்தேன். குழந்தை சுஜித் 26 அடி ஆழத்தில் இருக்கும்போதே மீட்டிருக்கலாம். ஆனால் அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள்.
குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த உடனேயே தமிழ்நாடு அரசு ஏன் பேரிடர் மீட்புக் குழுவையும், ராணுவத்தையும் அழைக்கவில்லை?, அதேபோல் மாநில அரசு முறைப்படி நீர்வளத்துறையினரிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். அதனையும் செய்யவில்லை. எந்த இடத்தில் எப்படிப்பட்ட பாறை இருக்கிறது. அது கடுமையான பாறையா? மென்மையான பாறையா? மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது என அனைத்து விவரங்களும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்திருக்கும். இவற்றையெல்லாம் அரசைக் குறைகூறுவதற்காக சொல்லவில்லை. சுஜித்திற்கு ஏற்பட்ட நிலை போன்று மீண்டும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கூறுகிறேன்'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏன் நீங்கள் சம்பவம் நடந்த உடனேயே வராமல் இப்போது வந்திருக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டக் கேள்விக்கு, 'நான் சம்பவம் நடந்த உடனேயே வந்திருந்தால் அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டிருக்கும்' என்றார்.
இதையும் படிங்க: சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி - கல்லறைக்குக் கொண்டுவரப்பட்ட உடல்!