திருச்சி: திருச்சி மன்னார்புரம் சாலையில் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. வாகன ஓட்டி பலமுறை முயற்சித்தும் ஆம்புலன்ஸ் ஒரு அடி கூட நகராத நிலையில், வண்டியில் இருந்து பெண் ஊழியர் உள்பட சிலர் கீழ் இறங்கி ஆம்புலன்சை தள்ளி, ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்டநேரம் முயற்சித்தும் ஆம்புலன்ஸ் ஸ்டார்ட் ஆகாததால் ஊழியர்கள் விழிபிதுங்கி சாலையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. மழைக்காலங்களில் இதுபோன்று ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றால், அதில் பயணிக்கும் நோயாளியின் நிலை என்ன ஆகும் என நெட்டிசன்கள் கருத்தினைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 108 ஆம்புலன்ஸ்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என அரசு உறுதிபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Rajiv Gandhi murder case: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!