திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தாயார் ரெங்கநாச்சியார் பிரகாரத்தில் நவராத்திரி உற்சவம் நேற்று(அக்.6) தொடங்கியது. வரும் 14ஆம் தேதி வரை 9 நாட்கள் இந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது.
கொலு மண்டபத்தை அடைந்த தாயார்
உற்சவத்தின் முதல் நாளான நேற்று ரெங்க நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 'கொலு மண்டபம்' வந்தடைந்தார். அங்கு 'நவராத்திரி கொலு' நடைபெற்றது.
பின்னர் இங்கிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். 2ஆம் திருநாளான இன்று முதல் 6ஆம் திருநாளான 11ஆம் தேதி மற்றும் 8ஆம் திருநாளான 13ஆம் தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பாடாகி கொலு மண்டபத்தை வந்தடைவார்.
தாயார் திருவடி சேவை எப்போது?
முக்கியத்திருவிழாவான நவராத்திரி விழா 7ஆம் திருநாளான 12ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
14ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி!