திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 25ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா காலகட்டுப்பாடு நடவடிக்கை குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி மாலை முதல் 25ஆம் தேதி காலை வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 25ஆம் தேதி காலை 8மணிக்கு மேல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ஒரு மணிநேரத்திற்கு 600 பேர் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் பக்தர்கள் வந்தால் கோயில் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது. கோயில் வெளிபுறமும், உட்புறமும் 220 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு அதன் மூலமாகவும் கண்காணிப்பு பணிநடைபெறும். 11 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்த 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இம்முறை விஜபி பாஸ் வழங்கப்படமாட்டாது. சொர்க்க வாசல் திறப்பு அன்று 1,300 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். புறக்காவல் நிலைய திறப்பு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, ஸ்ரீரங்கம் கோயில் பட்டர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.