திருச்சி: திருச்சி மன்னார்புரம் பகுதியில், வெளிநாட்டு விசாரணைக் கைதிகளை அடைத்து வைப்பதற்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு, போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேர் உட்பட 93 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலோனர் ஈழத்தமிழர்கள்.
இந்த முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள், தங்களை விடுவிக்கக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முகாமில் உள்ள 16 ஈழத்தமிழர்கள் இன்று தற்கொலைக்கு முயன்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 16 பேரில் இருவர் தங்களது கழுத்தை அறுத்தும், மற்றவர்கள் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், 16 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி ஆட்சியர் சிவராசு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘7 தமிழர் விடுதலைக்கு ஒன்றிய அரசு தடையாக இருக்கிறது’ - வைகோ குற்றச்சாட்டு