உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் மாதம் 2ஆம் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அந்நாளில் மூதாதையர்களை நினைவுகூறும் வகையில், கல்லறைக்குச் சென்று கல்லறையை தூய்மைப்படுத்தி, மாலை அணிவித்து, மலர்களைத் தூவி, மெழுகுதிரி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
இதன்மூலம் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், அவர்கள் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
இதேபோல் கல்லறை திருநாளான இன்று திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு வந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மூதாதையர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்தும், இறந்தவர்களுக்கு பிடித்த பண்டங்களை படையலிட்டனர்.
கோவைபுதூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கல்லறைகளில் மூதாதையர்களுக்கு பூக்கள் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியால் இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட சுனாமி நினைவு ஸ்தூபியில் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையும் படிங்க: தாளவாடியில் பிரசித்திப் பெற்ற சாணி அடி திருவிழா!