இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது பக்ரீத். இந்தப் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு கொண்டாடுவர். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே தொழுகை நடத்திவருகின்றனர். சென்னை, கோவை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், மரக்கடை சையது முத்தரஸா பள்ளி மைதானம், ஒத்தகடை ஈத்கா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று காலை சுமார் 7.30 மணி முதல் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தோடு இந்தச் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
சிறுவர், சிறுமியரும் இந்தத் தொழுகையில் ஆர்வத்துடன் பங்குபெற்றனர். இது தவிர திருச்சியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீப் தொழுகை நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர் குடும்பத்தினருக்கு குர்பானி அளிக்கப்பட்டது.