திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 51 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இறுதியாக நேற்று வரை 14 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஆறு பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதர நபர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இன்று இதில் ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைந்து உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே திருச்சி மாநகர் கரோனா தொற்று இல்லாத நகரமாக மாறியுள்ளது. இதன் மூலம் சிகப்பு நிற பட்டியலிலிருந்து ஆரஞ்சு நிற பட்டியலுக்கு திருச்சி மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.