கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பலமுறை போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது வரை அரசு இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை.
இதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 21) மீண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் சம்பளம் வழங்கவில்லை. எனவே, அவர்கள் சார்பில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.