திருச்சி: மணப்பாறை அடுத்த வெள்ளைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் என்.பூலாம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான, மணப்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர், சட்டத்திற்கு புறம்பாக தனது கடையை அடித்து உடைத்ததாக குற்றம் சாட்டி, உடைந்த கடையின் முன் நின்று வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என்.பூலாம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான, மணப்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மெஸ் நடத்தி வருகிறேன். அந்த வகையில், வணிக வளாக உரிமையாளர் ராஜாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான முறையில் வாடகை செலுத்தி வந்துள்ளேன். ஆனால் அவரோ, இந்த வருடம் வாடகையை உயர்த்தி தரும்படி கேட்டார்.
அதற்கு நான், எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எனது நண்பர் தான் கடையை பராமரித்து வருவதாகக் கூறி மறுத்தேன். ஆனால், அதனை ஏற்க மறுத்த ராஜா, பணத்தைக் கொடுத்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு என்னை வரவழைத்து, அங்கு கடையை காலி செய்யச் சொல்லி மிரட்டி கையெழுத்து வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் திமுக நகர துணைச் செயலாளராக பதவி வகித்த ஏ.பி.சரவணன் என்பவரின் அடியாட்கள் என்னுடைய கடைக்கு வந்து, கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, கடையை உடைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், இந்த இடத்தில் கடை வைத்து நடத்த ஐந்து வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளேன். கடந்த ஒரு வருட காலமாக இதய நோய் பாதிப்பினால் அரசு மற்றும் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இருப்பினும் வாடகையை சரிவர செலுத்தி உள்ளேன்.
குறிப்பாக, கரோனா காலகட்டத்தில் கடை இயங்காதபோதும் வாடகை பணத்தை தவறாது செலுத்தி உள்ளேன். ஆனால் இவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் ரவுடிகளை வைத்து எனது கடையை அடித்து நொறுக்கி காலி செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மற்றொரு தரப்பில் மெஸ் உரிமையாளர் ஆறுமுகம் சரியாக வாடகை செலுத்தாத காரணத்தால் கடை காலி செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் அவர்களிடம் நேற்று (நவ.30) அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆறுமுகம் என்பவர் கடந்த 29.08.2023 அன்று சுயநினைவோடு வந்து தீபாவளிக்குள் கடையின் வாடகையை செலுத்தி விடுவதாகக் கூறினார்.
மேலும், வாடகை செலுத்த முடியவில்லை என்றால் கடையை தானே காலி செய்து கொள்வதாக சுயநினைவோடு எழுதிக் கொடுத்துச் சென்றார். இதில் சம்மந்தப்பட்ட யாரும் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து அவரை மிரட்டவில்லை. அவர் எழுதிக் கொடுத்து சென்று மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து தன்னை மிரட்டியதாக கூறியுள்ள செயல் ஆதாரமற்றது” என தெரிவித்தார்.
இந்நிலையில், வாடகையை ஏற்றிதரக் கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் கடையை உடைத்து காலி செய்துள்ளதாக குற்றம் சாட்டி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த பதிவு அரசின் மீது அதிருப்தி மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சக அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: பருத்தி வீரன் பட விவகாரம்: வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது - சமுத்திரக்கனி ஆவேசம்!