திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று ( 19 ம் தேதி ) சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது . தேர்த்திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. மாவட்ட நிர்வாகம் , பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி , பங்குனி , சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் கொண்டவையாகும். இவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதையடுத்து தினமும் பகலில் மூலவர் மற்றும் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் , மண்டகப்படிகள், இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா ஆகியவை நடந்தன.
இன்று(ஏப்.19) தேர் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்சி மற்றும் சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன . விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் கோயில் நிர்வாக அதிகாரியும் , ஆணையருமான கல்யாணி தலைமையில் , கோயில் அர்ச்சகர்கள் , அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது . இதற்கென உற்சவ அம்பாள் இன்று காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு தேர்த்தட்டில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் தேர் வடம்பிடிக்கப்பட்டு நான்கு வீதிகளில் வலம் வந்து நிலைநிறுத்தப்பட்டது. ‘மகமாயி மகமாயி..!’ என்ற கோஷம் விண்ணை பிளந்தது.
இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் தேர் ஓட்டம் நடைபெறாத நிலையில் இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதையும் படிங்க: போலி மதுபான தொழிற்சாலை விவகாரம் - இரு போலீசார் பணியிடை நீக்கம்